நிம்மி என்று கேட்டால், குடிமகன்கள் சட்டென அடையாளம் சொல்லிவிடுவார்கள். சென்னை அண்ணாநகரை அடுத்த சத்தியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிம்மி என்கிற நிர்மலா. அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜீவாவின் மகள். கள்ளச் சந்தையில் சரக்கு விற்பதில் பேமஸ். வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் போலி சரக்கு விற்பனை ஓய்வதில்லை.
டிசம்பர் 11-ஆம் தேதி சனிக்கிழமை காலை 8:00 மணி அளவில், வந்த ஓர் குடிமகன் இரண்டு பாட்டில் போலி மதுவை வாங்கி அதில் ஒன்றை அருந்திய போது வழக்கத்திற்கு மாறாக இருந்துள்ளது. சரக்கு தரமா இல்லை எனச் சொல்லி பணத்தைத் திருப்பிக் கேட்டிருக்கிறார். சுற்றியிருந்த நிம்மியின் கைப்புள்ளைங்க பட்டையை உரித்துவிட்டார்கள்.
பலத்த காயத்துடன் கே.4 அண்ணாநகர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க, பீட்டு போலீசார் வர, அவர் மீதும் நாயை ஏவி ரணகளமாக்க, கே4 போலீசார் ஸ்டேஷன் எஸ்.ஐ. சின்னதுரை விரைந்து வந்து, அதிரடி சோதனை நடத்தி 65 கேஸ் 3120 பாட்டில் போலி மதுவை பறிமுதல் செய்தார்.
ஏற்கனவே நிம்மி மீது வழக்கு இருப்பதையும் புது கேஸ் போட்டால் குண்டாஸ்தான் என்றும் மிரட்டி பேரத்தை முடித்த எஸ்.ஐ., கைப்பற்றிய போலி மது பாட்டில்களை தனக்கு தெரிந்த டாஸ்மாக் பாருக்கு சப்ளை செய்துவிட்டார்.
இதை உளவுத்துறை மோப்பம் பிடிக்க, கலால் போலீஸ் பெண் இஸ்பெக்டர் மஞ்சுளா இதுபற்றி எஸ்.ஐ. சின்னதுரையிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 850 பாட்டில் மட்டும் கைப்பற்றியதாக, கே.4 அண்ணாநகர் காவல்நிலையத்தில் அடுத்தநாள் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நான் ஓ.பி.எஸ்.ஸின் உறவினர் என்றும் சென்னை மாநகர மேற்கு மண்டல ஜே.சி. ராஜேஸ்வரியின் வலது கரம் என்றும் வலம் வரும் எஸ்.ஐ. சின்னதுரையை தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை அட்டெண்ட் செய்யவில்லை. அவரது கருத்தை தெரிவித்தால் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.
ஆர்.எஸ்.பவுடர் கலந்த போலி சரக்கை டாஸ்மாக் பாரில் விற்பனை செய்தால் மக்களின் உயிருக்குத்தான் ஆபத்து.
சுதாரிக்குமா அரசு?